திருமுறிகண்டியில் மக்களுக்குச் சொந்தமான காணிகளை படைத்தரப்பு ஆக்கிரமிப்பு

14 Apr 2012

 

திருமுறிகண்டியில் உள்ள மக்களுக்கு சொந்தமான காணிகளை இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு உட்பட்ட திருமுறிகண்டிப் பகுதியில் உள்ள மக்களுக்குச் சொந்தமான காணிகள் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.இந்தப் பகுதியைச் சேர்ந்த சுமார் 119 குடும்பங்கள் இதுவரை அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. எனினும் அவர்களுக்கு சொந்தமான காணிகளையே இராணுவத்தினர் தம் வசப்படுத்தியுள்ளனர்.

இப் பகுதியைச் சேர்ந்த 46 குடும்பங்கள் மெனிக்பாம் நலன்புரி நிலையங்களில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்தக் குடும்பங்களின் காணிகளே இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இதனடிப்படையில் ஏ9 வீதியின் முறிகண்டிப் பிள்ளையார் ஆலயத்துக்கு முன்புறத்தில் அமைந்துள்ள திருமுறிகண்டிக்குளம், அதன் கீழ் உள்ள 80 ஏக்கர் வயல் காணி, திருமுறிகண்டித் தபாலகம், பொது மயானம், இரண்டு இந்து ஆலயங்கள், சுகாதார நிலையக் கட்டடம், கிராம அலுவலர் அலுவலகம், பொது நோக்கு மண்டபம் என்பவற்றை உள்ளடக்கிய பகுதிகளே இவ்வாறு இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

முறிகண்டிப் பகுதியில் இருந்த 119 குடும்பங்களில் 46 குடும்பங்கள் தற்போதும் நலன்புரி முகாமில் தங்கி உள்ளனர். ஏனையவர்கள் தொழில் வாய்ப்புகளைக் கருதி உறவினர், நண்பர் வீடுகளில் தங்கியுள்ளனர்.

இதுவரை மீள்குடியேற்றத்தினையும் மேற்கொள்ளாது தமது காணிகளை ஆக்கிரமிப்பதற்கு மக்கள் கடும் எதிப்புக்களை வெளியிட்டு வருகின்றனர். ஆனாலும் இராணுவத்தினர் தமது ஆக்கிரமிப்புக்களை நிறுத்துவதாக தெரியவில்லை.

யுத்தத்திற்குப் பின்னர் நாட்டில் சமாதான சூழல் என்று கூறப்பட்ட காலத்தில் இருந்து தமிழர்களது பகுதிகள் எங்கிலும் பரவலாக மக்களது காணிகள் இராணுவத்தினரால் வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்கப்பட்டு வருவதுடன் சிங்களக் குடியுற்றங்களையும் தொடர்ந்தும் அரசு மேற்கொண்டு வருகின்றது.

இது மட்டும் அல்ல அரச மரத்தைக் காணுமிடமெல்லாம் புத்த கோயில்கள் தானாக இரவோடு இரவாக தோன்றிவிடுகின்றன.

ஒரே நாடு ஒரே தேசம், நாம் எல்லோரும் ஒரு தாய் பிள்ளைகளே என்று மகிந்த அரசு கூறிவந்தாலும் அரசின் இவ்வாறான செயற்பாடுகள் தமிழினத்தை திட்டமிட்டு அழிப்பதற்கான யுக்திகளோ என்ற சந்தேகங்களும் பலரிடம் எழுந்துள்ளமை   இங்கு குறிப்பிடத்தக்கதாகும்

சிறப்புச் செய்திகள்
வீடியோ